புதன், 6 ஜனவரி, 2016

Posted by விகாரன் On AM 5:15



முன் குறிப்புக்கள்


01

நாடுகடத்தப்பட்ட ஆரிய குழுமத்தினரான  விஜயனும் அவனுடைய எழுநூறு தோழர்களும் இலங்கைக்கு வந்தபோது , இலங்கையில் இயக்கர் நாகர் முதலான தொல்குடிகள்  செழித்த இலங்கை நிலத்தில் வாழ்ந்துகொண்இருந்தனர். ஸ்பானியர்களும் பிரிடிஷ்காரர்களும் அமெரிக்க கண்டங்களின் தொல்குடிகளை  வலுக்குன்றச்செய்து தங்களுடைய குடியேற்றங்களை நிறுவ அவர்களிடம் ஆயுதங்களும் நரித்தந்திரமும் இருந்தன. நேரடியான போர் மூலம் அவர்களால் அது சாத்தியமானது .ஆனால் விஜயனுக்கு அது சாத்தியமில்லை. மிலேச்சத்தனம் காரணமாக நாடுகடத்தப்பட அவர்களிடம் வெறும் எழுநூறுபேரே காணப்பட்டனர். அவர்களால் நேரடியாக போர்செய்து இலங்கையில் ஒரு குடியேற்றத்தை பெறமுடியாது. 

எனவே விஜயன்  இலங்கையில் கண்ணுற்ற முதல் பெண்ணான குவேனியை வஞ்சித்து திருமணம் செய்தபின் மிக இலகுவாக இலங்கயின் ஆட்சியை தனக்கு கீழ் கொண்டுவந்தான். தேசத்தை கைக்கொள்ளதக்க பெண்களை அக்கால ஆதிக்குடிப்பெண்கள் கொண்டிருந்தனர். தாய்வழிச்சமூகத்தின் இருப்பு இலங்கையின்   வரலாற்று ஓட்டத்தில் அங்காங்கே முக்கியம் பெறுகின்றது. குறிப்பாக தென்னாசிய பெண்கள் ஐரோப்பியர் காலம் வரை (கி.பி 16 நூற்றாண்டு) தம் தாய்வழி சமூக உரித்தை ஆணுக்கு நிகராக பேணிவந்ததை இவ்வாறான வரலாற்று இடங்களின் மூலம்  அறிந்துகொள்ள முடிகின்றது.
                                    (2012 எழுதிய கட்டுரை ஒன்றிலிருந்து)

முன்குறிப்பு  02

30 வருடகால இனப்போர் ஆயிரக்கணக்கான போய்களாலும் உண்மைகளாலும் விளங்கிக்கொள்ளப்படுகின்றது. ஒவ்வொரு நிலத்தில் இருந்து பார்க்கும் ஒவ்வொரு தனிமனிடனுக்கும் போர் பற்றி வெவ்வேறான கருத்தாக்கங்கள் மனதினுள்ளும் அறிவினுள்ளும் கருக்கொண்ருக்கும். உண்மையின் அல்லது உண்மையின்மையின் இருப்பென்பது  நிலையற்ற ஓர்  மாறிலி என்றே கருகின்றேன் .

30 வருடமும்  ஒரு பெரும் கால மேடையில்  பொரும் போர் சார்ந்தவிடயங்களும் ஓர் நாடகத்தைப்போல நிகழ்த்தப்பட்டன.  நிகழ்த்துபவர்கள் தவிர ஏனையவர்கள் மேடையை சுற்றி வாழ்ந்தனர்.

(போரும் அதன் குழந்தையொன்றும் – கட்டுரையின் நறுக்கு)

ஆதிரை -01 சமூக அமைப்பினை முன் வைத்து.

காலணித்துவம் தென்னாசியாவின் பெண்மனத்தை ஆணின் பார்வையின் ஊடாக சிந்திக்கும் உணரும் ஓர் சார்பு நிலையினதாக பூரணமாக மாற்றிப்போட்டது,  குடும்பத்தில் தொடங்கும் சமூக கட்டுமானம் பெண்ணை ஆணின் சார்பானவளாக  மாற்றியது. தாய்வழிச்சமூக அமைப்பு தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் பெண் நனவிலி மனம் ஆண்சார்பினை ஏற்றுக்கொண்டது ஆண் அதிகாரத்தின் சின்னமானான் , ஆண்மனம் புறவயமான சுதந்திரமான சிந்தனை, மிக்கதாய் மாறிக்கொண்டது , பெண் அகத்தினுள்ளே வாழ்ந்தாள் அவளுடைய உச்ச பட்சமான கரிசனை தன்னுடைய குடும்பம் பற்றியதும் , சுதந்திரமான ஆணை பெற்றேடுப்பதும் வளர்ப்பதும் பற்றியதுமாகவே இருந்தது. விவசாய முதலானவற்றை கண்டறிந்தவளும்  மிகப்பெரும் நிலத்தலைவியாக  இருந்த  தென்னாசிய  பெண்மனம் காலணித்துவத்தின் பின்னர் பெருமளவில் மாற்றியமைக்கப்பட்டது , ஆதிப்பெண்ணின் உயர் தன்மை இறுதியாக தென்னாசிய குறிப்பாக இந்திய நிலத்திலேயே   எச்சங்களை கொண்டு நின்றது , உதாரணமாக இந்திய பெண் தெய்வங்கள் பற்றிய தொன்மங்களை பழைய  தாய்வழி சமூகத்தின் எச்சங்கள் எனலாம். இது இந்திய பண்பாட்டின் மிக செறிவான தாக்கத்தைகொண்ட இலங்கை நிலத்திற்கும் பொருந்தும்.


இலங்கையின் பெண் சமூக அமைப்பு என்பது பின் காலணித்துவத்தின் பின்னரும் இந்திய அளவில் ஆண்பார்வைக்குள் மறைந்து விடவில்லை என்றே கருதுகின்றேன். இலங்கை சமூக அமைப்பில் அதிலும் இலங்கை தமிழ்ச்சமூக அமைப்பில் பெண்கள் அகவயமான வாழ்வியலை மேற்கொண்டாலும் சமூக அமைப்பின் பெரும் தூண்களாகவே  ஆண்மனத்தினால் கருதப்படுகின்றது. குறிப்பாக  70 களின் பின்னர் எழுந்த விடுதலைப்போராட்டமும்  முரண்பாட்டுக்குள்ளே தினம் ஜீவித்த வாழ்க்கையும் குடும்பத்தலைவியும் ஆணுக்கு சமனாக இயங்க வேண்டிய கடப்பாட்டை உள்ளேற்றியது.


இதன் அடிப்படையிலேயே சயந்தன் ஆதிரையை  பெண் மனத்தில் அதிகம் காலூன்றி நின்று எழுதமுனைந்திருக்கிறார். நாவல் முழுவதும் எழும் போரின் , போராட்டத்தின்  பின்னணியில் இயங்கும்  குடும்பங்களினதும்  அவற்றின் தலைமுறைகளினதும் மாளாசோகமும் , கொண்டாட்டமும் இத்திமரத்துகாரி (காளி )யில் தொடங்கி ஆதிரை வரை பரந்து புரையோடுகின்றது. நாவல் முழுவதும் பெண்களிடமே காலம் இருக்கிறது , நாவலாசிரியரின் பிரதியை பெண்களே எழுதுகின்றனர்  மலையில் தொடங்கி காட்டில் இறங்கி குடாவில் திரும்பி  கடல் வரை பெண்களை தொடர்ந்தே எழுத்து செல்கின்றது.

நிற்க

நிலம் பற்றிய மூன்று குறிப்புக்கள்

மலை

சயந்தன் மலையகத்தில் கதையை தொடங்குகின்றார் , மலைய தமிழர்களின் வாழ்வின் பெருஞ்சோக் அத்தியாயங்கள் இன்ரு பரவலாக இலக்கிய மேடைக்கு எடுத்து வரப்பட்டாலும் இன்றும் அது “ஈழத்து இலக்கிய பரப்பில்” தனியான ஒன்றாக கருதப்படுகின்றது , இலங்கையின் 30 வருட போராட்டம் , அடக்கு முறை  , இனவாதம் என்பவற்றுக்கும்  மலையக மக்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லாததை போலவும் அவர்களுடைய துன்பம் பிறிதானது என்பதும்   இலக்கியங்களின் பொது புத்தியாகவுள்ளது , ஆனால் இனப்பிரச்சினைக்கும் சரி மலையகமக்களின் பிரச்சினைக்கும் சரி அடக்குமுறையும் அரசும் தான் எதிர் தரப்பு என்பதே உண்மை . யாழ்ப்பாணத்தார் “தோட்டக்காட்டான்” “கள்ளத்தோணி” என்று  மோசமமான  சித்தரிப்பொன்றை அவர்கள் மீது வைத்திருக்கின்றார்கள் , குறிப்பாக யாழ்ப்பாணத்தின் மேட்டுக்குடி உயர் சைவ வேளாளர் என்று சொல்பவர்களின் நாவில் நான் பலமுறை இத்தகைய வார்த்தைகளை கண்டிருக்கின்றேன், வன்னிமக்களை காட்டார் என்பதும் (ஆனால் போரின் போது வன்னிக்கு ஓடி பதுங்கிகொண்டது நகை முரண்) மலையக மக்களை கள்ளதோணி என்பதும் யாழ்ப்பாண பொதுமனநிலையின் கறுப்பு பக்கங்கள் இதனை ஆசிரியர் தெளிவாக காட்டுகின்றார். யாழ்ப்பாண மக்கள்  பற்றிய எள்ளி நகையாடல் களில் ஆசிரியர் மிகதிறமாக இவற்றை முன் வைக்கின்றார்.

மலையக மக்கள் இலக்கியத்திலோ , அரசியலிலோ தனித்து விட வேண்டியவர்கள் அல்லர் , உரிமைகள் கோரப்படும் போது தமிழ்ப்பரப்பு அவர்களின் தோள்களையும்  ஏற்றுக்கொள்ள வேண்டியது  கடமையாகும் என்பது சயந்தனின் தீர்க்கமான நிலைப்பாடு.
இந்தியராணுவம் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிங்கமலையை கொடுமைப்படுத்தும் போது வலியின் உச்சத்தில் அவ
“ஐய்யா நானும் இந்தியாவிலிருந்து வந்தவன் தான் ” என்று கதறுகின்றான். இந்திய இராணுவம் அவன் தலையைகொய்து எடுத்துபோகின்றது.

இவ்வாறு .

காடு
கதை காட்டிற்கு இறங்கிய பின்னர் தான் உருக்கொண்டாடுகின்றது , போராட்டத்தின் பின்னணியில்   பெண்களும் ஆண்களும் வாழ்வியலை மாற்றியமைக்கின்றனர். தொழில்கள் மாறுகின்றன, உறவுமுறைகள்  புரழ்கின்றன. மூன்று தலைமுறைக்கும் வெவ்வேறேனான வாழ்க்கை முறை , இயற்கையில் இருந்து மக்களை போர் பிரிக்கின்றது , தெய்வநம்பிக்கைகள் , இத்திமரமாக  பாறிவிழுகின்றன , காட்டின் மகன்கள் சோபையிழந்துபோகின்றனர். காடு சமநிலையை இழக்கின்றது எனினும் மனிதர்களை அது கைவிடுவதாக இல்லை , மயில்குஞ்சன் , சங்கிலி போன்ற மனிதர்கள் விடுதலைக்காக போராடுபவர்களை காட்டுக்கு அறிமுகம் செய்து வைக்கின்றனர், காட்டை அவர்கள் எடுத்துக்கொள்கின்றனர்.காடு அவர்களை எடுத்துக்கொள்கின்றது. காட்டின் விளிம்பில்  போர் தொடங்குகின்றது , இளவர்சர்களும் இளவரசிகளும் போருக்கும் போகின்றனர், அவர்களிம் காதல் இருக்கிறது , காமம் இருக்கிறது கூடவே ஓர்மமும் கோபமும் காலத்திற்காக வந்து சேர்கின்றன , காட்டின் விளிம்புகள் அவர்களை உள்ளே இழுத்துகொள்கின்றது அவர்கள் காட்டுக்குள் நுழைய விளிம்பில் இருந்த மக்கள் கொஞ்சம் அசுவாசம் அடைகின்றனர் , அவர்களை பாதுகாக்க காட்டுக்குள் இளவரசர்களும் இளவரசிகளும் இருக்கின்றனர் , அவர்கள் அரசர்களை நம்புகின்றார்கள். எல்லோரும் நம்புகின்றார்கள்.
இடையில் தாய்குலத்தின் கண்ணீர் எழுகின்றது.


குடா

விடுதலை போராட்டத்தின் ராஜாக்களின் நகராகவும் , சிறிய நீர்ப்பரப்பால் துண்டிக்கப்படும் நிலமான யாழ் குடாநாட்டின் மனநிலை உடைய மக்களை சயந்தன் நன்கு உள்வாங்குகின்றார் , சாதியமைப்பு , சொத்து சேர்த்தல் முதலான இடங்களில் யாழின் உண்மை முகங்கள் பலதும் வெளியே எடுக்கப்படுகின்றன. கதையின் பல இடங்களை திருப்பிவிடும் நிலமாக யாழ் வன்னியுடன் அவ்வப்போது இணைகின்றது.


கரை

கரையில் எல்லோரும் நம்பிக்கையுடன் ஒன்று கூடுகின்றார்கள் , இளவர்சர்களும் இளவரசிகளும் வஞ்சிக்கப்படுகின்றார்கள். போர் தாண்டவமாடுகின்றது , நம்பிக்கையெல்லாம் கடலில் கரைகின்றது , மாபெரும் கனவு உடைந்து நொறுங்குகின்றது, ஒரு இனம் அதன் நிலத்தில் வஞ்சிக்கப்படுகின்றது.  கரையெல்லாம் ரத்தம் .  போர் முடிந்த பின் அல்லது முடிந்ததாக சொல்லப்பட்ட பின் எல்லாம் ஓலத்தில் நிலைக்கின்றது.
ஆண்களின் ஓலம் பெண்களின் குரலில் மறைந்து போகின்றது.

இனி




ஆதிரை நாவல் விமர்சனம் இங்கே தொடங்குகின்றது
.
முன்பு குறிப்பிட்டதைப்போல் ஆதிரை போருக்கு பின்னால் இயங்கும் மூன்று தலைமுறையின், தாய்களின் கண்ணீரை தாங்கிநிற்கின்றது , அழகியல் பூர்வமான படிமங்களை ஆதிரை பெரும்பாலும் வெற்றிகரமாக உருவாக்கின்றது . மொழியமைப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்ற எண்ணத்தை சில இடங்களில் காணலாம்.
சயந்தன் உண்மையின் பக்கத்தில் குற்ற உணர்வோடு நிற்கப்பார்கின்றார் , பிரபாகரன் சொன்ன
இயற்கை எனது நண்பன் ,வாழ்க்கை எனது தத்துவாசிரியன்  வரலாறு எனது வழிகாட்டி , என்பவை ஆரம்ப அத்தியாயங்களின் பெயர்களாய் அமைக்கின்றார். அதனைப்போல் ஓயாத அலைகள்  வெற்றி நிச்சயம் என்று பெரும் போர்களங்களின் பெயர்களும் ,

இங்கே குற்றம் என்பது கூட்டு பொறுப்பும் கூட , நம்முடைய பிணங்களை மீள் பரிசோதனை செய்யவேண்டும்தான் ஆனால் தியாகங்களை கொச்சைபடுத்தல் என்பது அறமன்று.
உண்மையினதும் , அறத்தினதும் , அன்பினதும் , கருணையினதும் மற்றும் நீதியினதும் அருகில் சென்று நின்று கொள்ளள் மட்டுமே உத்தமானது.

ஓஷோ வாழ் நாள் பூராகவும் காந்தியை விமர்சித்தவர் ,ஏராளம் கடிதம் காந்திக்கு எழுதிதள்ளினார் , காந்தி உருவாக்க நினைக்கும் இராம ராஜ்ஜியம் மீது கேள்வி கேட்டார் , காட்டமாக விமர்சித்தார் , எதிர்பிலே வாழ்ந்தார். ஆனால் காந்தி இறந்ததும் ஓஷோ குலுங்கி குலுங்கி அழுதாராம் .

நிற்க

நாவலில் ஒரு இடத்தில்

“போன கிழமை சந்திரா டீச்சரிட்ட படிச்சதெண்டு சயந்தன் எண்டு ஒருத்தன் வந்தவன் கதையெழுதுறவனாம்  ரீச்சர் எப்பிடி செத்தவா ? நீங்கள் எந்த பாதையால  மாத்தளனுக்கு போனீங்கள்  , ? இயக்க பெடியள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் ? அவங்கள்ள இப்பவும்  கோவம் இருக்கோ  எண்டெல்லாம் கேட்டு தன்ர ரெலிபோன்ல ரக்கோட் செய்தவன் ”
“ஏனாம் ?”
“தெரியேல்ல  சனம் உத்தரிச்சு அலஞ்ச நேரம் கள்ளத்தோணியில வெளிநாட்டுக்கு போனவங்கள் இப்ப எல்லாம் முடிஞ்ச பிறகு எல்லாரும் வந்து விடுப்பு கேக்கிறாங்கள்”

என்று வரும் .

இப்பிடியான இடங்களிலும் அத்தார் , சிவராசன் முதலான பாத்திரங்களின் நிலையிலும் அப்பாத்திரங்களின் மொழிதலிலும்  அடிக்கடி ஆசிரியரின் மரணத்தையும் மனத்தையும் காணமுடிகின்றது.


போரின் பின்னர் நடக்கும் அத்தனை அத்தியாயங்களும் 2000 களின் குழந்தைகளாக எமக்கு  முன்னே நிகழ்ந்தவை  நிகழ்ந்துகொண்டிருப்பவை , கடைசி 70 பக்கங்களை கண்ணீருடன் கடக்க வேண்டியுள்ளது ,
விபூசிகா போன்று போரின் மிச்ச அவலங்கள் பெண்குரலெடுத்து காணாமல் போன உறவுகளுக்கு ரோட்டில் கிடந்து அழும் காட்சிகளை இப்போது தரிசித்துகொண்டிருகிறோம் . எல்லோர் வீட்டிலும் போரின் ஏதோ ஒரு மிச்சம் கிடந்து அழுத்துகின்றது ஆத்மாவிற்கு நெருக்கமாக சென்று நெருடுகின்றது .

இது செவ்வியல் இலக்கியமாக , மகத்தான நாவலா என்பதற்கு 508 பக்கத்தில் கசியத்தொடங்கும் கண்ணீர் 664 ஆம் பக்கத்தில் ஆதிரை சயனைடை எடுக்கும் போது ஒரு நதியாக மாறிவிட்டதை மீறி நான் எதுவும் எழுதுதல் . சுயகொலையாகும்.

ஆதிரை  தமிழிலக்கிய பரப்பின் இன்னொரு பெரும் பாய்ச்சல் , தலைமுறைகளின் கொண்டாட்டம்  , இருப்பு , கண்ணீர் என்பவற்றின்  பிறிதொரு படியெடுப்பு.  இத்திமரக்காரி எனும் மிகப்பெரும் பெண் தொன்மத்தில் இருந்து ஆதிரைவரை ஒலிக்கும்  கூட்டு பெரும் பெண்குரல், ஆதிரை தனி ஒரு முழுமையான செய்தியை சொல்லு முடிக்கவில்லை , அது எச்சங்களை , அல்லது சூல்களை உருவாக்குகின்றது , ஆதிரை  ஒரு  கருவுற்ற பெண் நாவல் , இன்னும் பலதை உருவாக்கதக்க சூல்களை ஆதிரையெங்கும் காண்கின்றேன். இன்னும் ஆயிரக்கணக்கான உண்மைகள் இருக்கின்றன, நாம் மிகத்தொலைவிற்கு போகவில்லை கடந்தகாலம் மிக அருகில் கிடக்கின்றது , இன்னும் உத்தரித்து கிடக்கின்றது.  

வேதனையுறும் சமூகத்தின் அவலக்குரல் , கோபத்தின் சீற்றம் , அறத்தின் யுகக்கண்ணீர் , நீதியின் நெடுந்தாகம் ஆதிரையின் வழியே பெரும் சத்தமாய் , அவலக்குரலால் கோரப்படுகின்றது.
அதுவும் ஒரு பெரும் குரல் கூட்டம் பெண்குரலால் அழுத்தி ஒலிக்கின்றது ,
ஏன் ஆண்கள் யாரும் அவலத்தில் அழுவதில்லையா , அது கண்ணீரில்லையா?
ஆம் , ஆனால்

பெண்ணின் கண்ணீர் ஆத்மாவிற்கு மிக நெருக்கமானது .

-யதார்த்தன் -









0 கருத்துகள்:

கருத்துரையிடுக